இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் குறித்து இன்று வரை பல வினாக்கள் தொடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
பல்வேறு தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது தொடர்பில் இன்றுவரை உறுதியான ஒரு விடை கிடைக்காமல் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
அப்போதைய காலக்கட்டத்தில் கடமையில் இருந்தவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும் இது குறித்து இன்றுவரை சரியான செய்தியை மக்களிடமோ, மற்றும் ஏனைய தரப்பினரிடமோ வெளியிடாமல் உள்ளனர்.
அந்த வகையில் யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸவிடம் ஊடகம் ஒன்று இது குறித்து பல கேள்விகளை தொடுத்திருந்தது.
இதில் முக்கியமாக பொட்டு அம்மான் மற்றும், பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா ஆகியோர் எங்கே? என்ன ஆனார்கள் என்பது குறித்து கேள்விகள் தொடுக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர்,
“புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தில் இறந்தார்கள், ஆனால் எந்த சந்தர்ப்பத்தில் என்று தெரியாது. களப்பு வழியாக தப்பிச்செல்ல முற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவரும் இறந்திருக்கலாம். ஏனெனில் அங்கு இறந்தவர்களின் உடல்கள் சேதமாகி இருந்தன. உருகுலைந்த நிலையில் காணப்பட்டன. இதனால் பொட்டு அம்மான் யார்? ஏனைய முக்கியஸ்தர்கள் யார்? என்பதை அடையாளம் காணமுடியாமல் போனது.” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா?
“கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் மனைவி பிள்ளைகளை நாம் உயிருடன் பிடித்திருந்தோம். அவர்களை எதுவும் செய்யவில்லை. அவர்களை கடற்படையினரின் பாதுகாப்பில் வைத்திருந்தோம்.
அந்த வகையில் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் அவர்களையும் நாம் பாதுகாத்திருப்போம். ஆனால் அவர்கள் எம்மிடம் கிடைக்கவில்லை.
பிரபாகரனின் தந்தையையும் தாயையும் கூட நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி அறிந்த பின்பும் நாம் அவர்களைப் பாதுகாத்தோம்.” என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.