பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி பாராட்டு

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
ஜப்பானின் நசோமி ஒகுஹாரா சிறப்பாக விளையாடி, இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்துவை 19-21, 22-20, 20-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தீவிரமாக போராடிய சிந்து இறுதியில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். இதையடுத்து, சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் போராடி தோற்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், ’’நீங்கள் மிக நன்றாக விளையாடினீர்கள். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உங்கள் ஆட்டத்தை கண்டு நாங்கள் பெருமிதம் அடைந்துள்ளோம். வாழ்த்துக்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர் முகமது கைப் ஆகியோர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பேட்மிண்டன் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பும் சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.