எல்லைப் பிரச்சினை! சீன – இந்திய படைகள் விலகல்! துணிவுக்கு கிடைத்த வெற்றி

பூட்டானின் டோக்லாம் பகுதியிலிருந்த சீனப் படைகள் பின்வாங்கி விட்டிருக்கின்றன. சாலை அமைக்கும் பணியும் கைவிடப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

Daily_News_162578821183

இந்தியாவும் தன் பங்குக்கு எல்லையிலிருந்த தனது படைகளை அகற்றியிருக்கிறது. பாதுகாப்புக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பூட்டானின் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

டோக்லாமில் காணப்பட்ட பதற்றத்துக்கு இரண்டு தரப்பும் ஒருவிதப் புரிதலோடு முடிவு கண்டிருக்கிறார்கள்.

இந்தியா – சீனா – பூட்டான் மூன்று நாடுகளும் இணையும் முச்சந்தியில், சீன – பூட்டான் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் 269 சதுரகி.மீ. நீளமுள்ள பகுதிதான் டோக்லாம்.

பூட்டானின் எல்லைக்குப் பாதுகாப்பாக இந்தியப் படைகள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியை 1980 முதல் சீனா சொந்தம் கொண்டாடி வந்திருக்கிறது என்றாலும் இதுவரை எந்தவித ஊடுருவலோ தாக்குதலோ அங்கே நடத்தியதில்லை.

கடந்த ஜூன் 16-ஆம் தேதி அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வாகனப் போக்குவரத்துக்காக சாலை அமைக்க சீனத் துருப்புகள் சாலைப் பணியாளர்களுடன் அங்கு களமிறங்கின.

இந்தியப் படைகள் பூட்டானின் எல்லைக்குப் பாதுகாப்பாக சீனாவின் மக்கள் விடுதலைப் படையினரைத் தடுத்து நிறுத்தின. அதுமுதல் கடந்த 73 நாட்களாக டோக்லாம் சமவெளிப் பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.

எப்போது வேண்டுமானாலும் போர் மூளக்கூடும் என்கிற அளவுக்கு டோக்லாம் பதற்றம் அதிகரித்த நிலையில் இருந்தது. இந்தியா குறித்து சீன ஊடகங்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டன.

1962 இந்திய – சீனப் போருக்குப் பிறகு எல்லைப்புறத்தில் இந்தளவுக்கு பதற்றம் தொடர்ந்ததில்லை. எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதில் சீனா குறியாகவே இருந்தது.

அதற்கு பல காரணங்கள் உண்டு.ஆசியாவின் தனிப்பெரும் வல்லரசாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்வதில் சீனா முனைப்பாக இருக்கிறது.

இந்தியாவின் பலம் இவ்வளவுதான் என்று உலகுக்கு எடுத்துக்காட்டி, தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் இந்தியாவை சிறுமைப்படுத்துவது சீனாவின் நோக்கமாக இருக்கக்கூடும்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்திய விஜயம் மேற்கொண்டார். அவரது விஜயத்தின் போது லடாக் பகுதியில் சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஊடுருவி மனரீதியான அழுத்தத்தைக் கொடுத்து இந்தியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டது.

அதேபோன்ற ஒரு முயற்சிதான் டோக்லாம் சமவெளியில் சீனாவின் நடவடிக்கையும் என்று கருத இடமிருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி மட்டுமல்லாமல், இராணுவ ரீதியிலான வெற்றியும்கூட.

73 நாட்கள் சீன இராணுவத்தின் அழுத்தத்தை சற்றும் பின்வாங்காமல் இந்தியாவால் எதிர்கொள்ள முடிந்தது என்பதையும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு பதற்றமே இல்லாமல் சீனாவின் முயற்சிகளை எதிர்கொண்டது என்பதையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அக்சாய்சின், அருணாசலப் பிரதேசம், லடாக்கைத் தொடர்ந்து இப்போது டோக்லாமிலும் நாம் நமது எல்லையைப் பாதுகாக்க முடிந்திருக்கிறது.

இந்திய எல்லையில் ஊடுருவாமல் பூட்டானின் பகுதியான டோக்லாம் முச்சந்தியில் சீனா ஊடுருவியதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

1947 முதல் இந்தியாவும் பூட்டானும் மிகவும் நெருக்கமான ராஜீய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2007-இல் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி பூட்டானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

இந்தியாவால் தனது ஒப்பந்தத்தை காப்பாற்ற முடியாமல் போனால் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் தங்களது பாதுகாப்புக்கு சீனாவிடம் நட்புப் பாராட்டத் தொடங்கும், இந்தியா பலவீனப்படும்.

சீனாவின் ஊடுருவலைத் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தி பூட்டானின் எல்லையை இந்தியா பாதுகாத்திருப்பதன் மூலம் நமது அண்டை நாடுகள் மத்தியில் மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கிலும் இந்தியாவின் மரியாதை உயர்ந்திருக்கிறது.

சீனா, டோக்லாமிலிருந்து பின்வாங்கியதற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. முதலாவது காரணம், இந்திய – சீன வர்த்தகத்தில் 70 பில்லியன் டாலர் (சுமார் ரூ.44 லட்சம் கோடி) சீனாவுக்கு இந்தியா தர வேண்டும்.

சீனாவின் மிக முக்கியமான ஏற்றுமதி இலக்குகளில் இந்தியாவும் ஒன்று. தற்போது சீனாவின் பல்வேறு இடங்களில் தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சீனாவின் பொருளாதாரமும் பாராட்டும் படியாக இல்லை. இந்தச் சூழலில் போர் மூளுமானால் அது இந்தியாவை விட சீனாவைத்தான் மிக அதிகமாக பாதிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாமல் போனால் பிரிக்ஸ் என்கிற அமைப்புக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

சீனாவின் கனவான ஆசிய – ஆப்பிரிக்க – ஐரோப்பாவை இணைக்கும் வர்த்தகச் சாலை அமைப்பதை, இந்தியாவுடனான போர் பாதிக்கும் என்பதுவும்கூட சீனா பின்வாங்கியதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

இதையெல்லாம் ராஜதந்திர ரீதியாக உணர்ந்து, எந்தவித பதற்றமும் இல்லாமல், போர்ச் சூழலை எதிர்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் இதற்கான முழுப் பாராட்டும் சேர வேண்டும்.

இந்தியாவின் துணிவு சீனாவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையுமே இந்தியாவை வியந்து பார்க்க வைத்திருக்கிறது!