வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
அவ்வாறு கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டு தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் விஜயராஜ் பற்றி கடந்த மாதம் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து பெரும்பாலோரின் பார்வை இவ் இளைஞன் மீது திரும்ப ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ் இளைஞனை அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
இன் நிலையில் இவ் இளைஞனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக கொழும்பில் இவ் இளைஞனுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய மற்றும் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நுவான் சொய்ஸா ஆகியோர் முதற்கட்ட பயிற்சிகளை வழங்கினர்.
மேலும் இது தொடர்பில் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இவர் ஸ்ரீலங்கா அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அவ்வாறு விளையாடும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடும் முதல் தமிழ் இளைஞன் இவராக இருப்பார் என்றும் தெரிவித்ததுடன் இவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
கிளிநொச்சி புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வியைப் பயின்று பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் விஜயராஜின் இலட்சியம் இலங்கை கிரிக்கெட் குழுவில் இணையவேண்டும் என்பதே.
இவரது இலட்சியம் நிறைவேற நாமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.