ஒசாமா பின்லேடன், அவரது மனைவி, பிள்ளைகள் நிராயுதபாணிகளாக இருக்கும் போது சுட்டுக்கொன்றது குறித்து கேள்வி எழுப்பாத ஐ.நா அதிகாரிகள், சிறிலங்காவில் போரின் இறுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து மாத்திரம் கேள்வி எழுப்புவது ஏன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. புகைப்பட ஆதாரங்கள் சிலவும் உள்ளன. நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் இந்த விடயம் குறித்து விமர்சித்துள்ளார். இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்? என்று கோத்தாபய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு அவர், “ இந்த விடயம் குறித்து பரிசீலனை நடத்தினோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாலச்சந்திரனை பிடித்து வைத்திருந்தமை குறித்த தகவல்கள் இல்லை. ஆகவே அவருடைய மரணமும் போரின் போது தான் நடந்திருக்கும் என்று நான் கருதுகின்றேன்.
பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்ரனி தந்தையை விட்டு தனியாக சென்று போர் செய்தவர் என்று கூறலாம். ஆனால் பாலச்சந்திரன் அவரைப் போன்று தனியாகச் சென்று யுத்தம் செய்யக் கூடிய வயதுடையவராக இருக்கவில்லை. அதனால் அவர் பிரபாகரனுடனேயே இருந்திருப்பார்.
இவ்வாறான வரை தனியாக விட்டு பிரபாகரன் சென்றிருக்கமாட்டார் அல்லவா? பிரபாகரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அவரும் உயிரிழந்திருப்பார். அதிகாரபூர்வமாக நான் அறிந்து கொண்ட விபரம் இது தான்.
இதுகுறித்து பரவலாக பேசுகின்றார்கள். ஒசாமா பின்லேடன், அவரின் மனைவி, அவர்களின் பிள்ளைகள் என்று எவருடைய மரணம் குறித்தும் பேசவில்லை. அவர்களை நிராயுதபாணியாக இருந்தபோதே சுட்டுக்கொன்றார்கள். அதனை அமெரிக்க அதிபர் உள்ளிட்டவர்கள் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஏன் இந்த விடயம் குறித்து பேசுவதில்லை? கேள்வி எழுப்புவதில்லை?
ஆனால் சிறிலங்காவின் போர்க்களத்தில் இடம்பெற்ற இந்த விடயத்தை பெரிதுபடுத்தி விமர்சிக்கின்றார்கள்.
எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றது. போரின் இறுதி நாட்களில் இரவில் எந்த நேரத்திலும் கூட புலிகள் பாதுகாப்பு வலயங்களை உடைத்துக்கொண்டு செல்வார்கள் என்ற அச்சத்துடனேயே படையினர் இருந்தார்கள்.
மே 16ஆம் நாள் இரவு ஒரு குழு களப்பு வழியாக பாதுகாப்பு வலயத்தை உடைத்துச் செல்ல முற்பட்டார்கள்.
அவ்வாறு பல சம்பவங்கள் நிகழக்கூடிய இடத்தில் நடந்த சிறு விடயம் குறித்துத்தான் விசாரணை செய்ய முற்படுகின்றார்கள்.
ஒசாமா விடயத்தினை கண்டுகொள்ளாதிருக்கின்றார்கள். அதற்காக, ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டமை தவறு என்று கூறவில்லை.
எமது விவகாரத்தினை ஒருவகையிலும் அந்த விவகாரத்தினை இன்னொரு வகையிலும் இருவிதமாக பார்ப்பது ஏன் என்றே கேட்கின்றேன்.” என்று பதிலளித்துள்ளார்.