இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை கேட்டதும் அங்கே நின்றிருந்த குர்மீத் சிங் கண்ணீர் விட்டு கதறினார். தனக்கு மன்னிப்பு வழங்குமாறு கரம் கூப்பி நீதிபதியிடம் அவர் வேண்டிக்கொண்டதுடன், அந்த அறையை விட்டு நகரவும் மறுத்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையிடப்போவதாக குர்மீத் சிங் கூறி உள்ளார்.
தண்டனை வழங்கப்பட்ட போது கோர்ட்டு அறையின் உள்ளேயும், வெளியேயும் பெரும் நாடகத்தை நடத்தினார் குர்மீத் சிங்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜக்தீப் சர்மா “குற்றவாளி (குர்மீத் சிங்), தன்னை கடவுள் என்று பின்பற்றிய பக்தர்களை கூட விடவில்லை. மனிதநேயம் பற்றி கவலை கொள்ளவில்லை. குற்றவாளியிடம் இயற்கையாகவே கருணை என்பது கிடையாது. இது அவருடைய நடவடிக்கையின் மூலமே தெரிகிறது. இதுபோன்ற குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து எந்தஒரு கருணையும் எதிர்பார்க்க கூடாது. குற்றவாளி மிகவும் கொடிய மிருகத்தைபோன்று நடந்துக் கொண்டு உள்ளார், எந்தஒரு கருணையும் கிடையாது,”என கூறிவிட்டார்.
பாலியல் பலாத்காரம் என்பது உடல் ரீதியான தாக்குதல் மட்டும் கிடையாது; அது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த நலனையும் அழித்துவிடுகிறது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை குறிப்பிட்ட சிபிஐ கோர்ட்டு, இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தேரா தலைவரை கடவுள் என ஏற்றுக் கொண்டு உள்ளனர், அதுபடியே பின்பற்றி உள்ளனர். இருப்பினும், குற்றவாளி (குர்மீத் சிங்) அப்பாவி பக்தர்கள் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதலை நடத்திஉள்ளனர், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டிஉள்ளார், இதுபோன்ற குற்றவாளி எந்தஒரு கருணையையும் எதிர்பார்க்க முடியாது என கோர்ட்டு கூறிவிட்டது.