இலங்கை அரசாங்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி வெளியிட்டுள்ள கருத்துக்கு, இணக்கம் தெரிவித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் டுவிட்டர் பதிவொன்றை விடுத்துள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், “நல்லிணக்கம் தொடர்பான மிக முக்கியமான விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் கடப்பாடுகளில் முன்னேற்றங்கள் தேவை” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம், எவ்வித முன்னேற்றத்தையும் காட்டத் தவறியிருப்பதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்திருந்தார்.
இது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் போல் கொட்பிறி தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியின் கருத்துக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தரப்புகளுகம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், அமெரிக்க தூதுவரின் கருத்து இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.