சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் முன்றலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
அந்த மனுவில், “காணாமல் ஆக்கட்டவர்கள் தொடர்பில் சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும், சுயாதீன நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் உள்நாட்டில் குற்றமாக்கப்பட வேண்டும். இறுதிப் போரின் போது படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இழப்பீடு மற்றும் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்” உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.