நடிகை வழக்கில் திடீர் திருப்பம் – பல்சர் சுனில் அந்தர் பல்டி

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பில்லை என, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவரின் ஜாமீன் மனு இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுவனத்தில் கொடுத்ததாக பல்சர் சுனில் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும், அந்த நிறுவன வங்கி கணக்கிலிருந்து பல்சர் சுனிலுக்கு பணப் பறிமாற்றமும் செய்யப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது
எனவே, இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், அவரின் வீட்டிற்கு சென்று  பல மணி நேரங்கள் விசாரணை செய்தனர். அப்போது, அவர் அழுது புலம்பியதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் காவ்யா மாதவனுக்கு தொடர்பில்லை என போலீசாரிடம் இன்று பல்சர் சுனில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம், இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.