திருமலை: காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது உண்மைதான் என பல சம்பவங்கள் நிருபித்துள்ளது.
அந்த வகையில் 55 வயது பெண்ணும், 22 வயது வாலிபரும் காதலித்து திருமணம் செய்துவைக்கும்படி கூறி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சுவாரஸ்ய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கோல்கொண்டாவில் உள்ள தாண்கோட்டாவை சேர்ந்தவர் 55 வயது பெண். இவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியில் உள்ள கூரியர் கம்பெனியில் கண்காணிப்பாளராக பணிபுரியும் 22 வயது வாலிபருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் அவர்களுக்கிடையே காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் 55 வயது பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக வாலிபர் தனது பெற்றோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டுகொள்ளாத வாலிபர், தனது காதலியுடன் கோல்கொண்டா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார்.
நாங்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் தீ பற்றிக்கொண்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்தோம்.
எங்களுக்குள் மன ஒற்றுமை ஏற்பட்டது. வயது ஒரு தடையாக நாங்கள் கருதவில்லை. எங்கள் காதலை ஏற்க எங்களது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
எனவே எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் எனக்கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கவுன்சலிங் கொடுத்தனர். ஆனால் இதை இருவரும் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, இருவரையும் ஒரு வாரம் கழித்து வரும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். 55 வயது பெண்ணை 22 வயது வாலிபர் காதலிப்பதாகக்கூறி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.