விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் வீடியோ பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் அனைவரும் பகிரவே படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. தயாரிப்பு தரப்பிலிருந்து பெரும் முயற்சி செய்து அந்த வீடியோவை நீக்கி வருகிறார்கள். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தியேட்டரிலேயே பார்ப்போம்.. அன்பான ரசிகர்களே.. தயவுசெய்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ காட்சிகளை பகிர்ந்து பார்த்து ஊக்குவிக்காதீர்கள். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் மீதியுள்ளது. அது முடிந்ததும் டீசர், பாடல்கள் குறித்து முடிவு செய்துவிடலாம்.
இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.