முகநூலில் எனது புகைப்படங்கள் வெளிவந்திருந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வது ஆபத்து என கருதி சிகிச்சைகளுக்காக கொழும்பு சென்று விட்டதாக புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய ட்ரயலட்பார் முறையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியில் நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது எதிரிகள் தரப்பு சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது, மாணவி கொலை வழக்கின் 9வது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மன்றில் சாட்சியமளித்திருந்தார்.
இதன் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்த்தும் சாட்சியமளிக்கையில்,
நானும் எனது நண்பனுடன் வாகனத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்கு முடிவெடுத்திருந்தோம்.
இதன்போது புங்குடுதீவு பாலம் முடிவடைந்த வேலணை பகுதியில் பொது மக்கள் நீ தானே மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசியின் அண்ணா என கேட்டு தாக்கி என்னை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே என்னை காப்பாற்றினார். பின்னர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
பொலிஸில் முறைப்பாடு செய்தமைக்கான பதிவு துண்டும், வைத்தியசாலைக்கு செல்ல துண்டு ஒன்றும் தந்தனர்.
அந்த நேரம் தம்பியாட்களை பொலிஸ் நிலையம் கொண்டு வந்தாங்க அப்போது பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் சன கூட்டம் காணப்பட்டது. இந்த நேரம் வெளியில் செல்வது ஆபத்து என கூறி பொலிஸார் எம்மை தடுத்து வைத்திருந்தனர்.
பின்னர் இரவு என்னை வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அப்போது எனது படங்கள் முகநூலில் வந்ததால் நான் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு செல்வது ஆபத்து என கருதினேன்.
அதன் பின்னரே சிகிச்சைகளுக்காக கொழும்பு சென்றேன். இந்நிலையில், கொழும்பில் 19ஆம் திகதி காலை தங்கி இருந்த வேளை என்னை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் முதலில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நான் மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவனா என கேட்டார்கள். அவர்கள் இல்லை என கூறினார்கள்.
பின்னர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக கேட்டார்கள் அவர்களும் இல்லை என பதில் அளித்தார்கள்.
அதனால் என்னை விடுவிக்க இருந்த சமயம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடர்பு கொண்டு நான் அவர்களுக்கு தேவைப்படுவதாகவும், என்னை விடுவிக்க வேண்டாம் எனவும் கூறினார்கள்.
அதனால் என்னை தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸார் தடுத்து வைத்திருந்தார்கள். அன்றைய தினமே என்னை கொடிகாமம் பொலிஸார் வெள்ளவத்தை பொலிசாரிடம் இருந்து பாரம் எடுத்து யாழ்.நோக்கி வந்தார்கள்.
இடையில் அனுராதபுரத்தில் தமது வீட்டுக்கு சென்று குளித்து தேநீர் அருந்தி என்னை அழைத்து வந்தார்கள். இடையில் வவுனியா அல்லது கிளிநொச்சி பகுதி எது என எனக்கு சரியாக தெரியவில்லை.
அதில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி பாரிய முகாம் ஒன்றுக்கு பின்னால் என்னை அழைத்து சென்றார்கள். அங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் நின்றனர். அத்துடன் ஹெலி இரண்டும் நின்றது.
அங்கு இருந்த வரை படம் ஒன்றை சுட்டிக்காட்டி சிங்களத்தில் கதைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது தமிழ் தெரிந்த ஒருவர் எனக்கு சொன்னார்.
வீதியால் என்னை அழைத்து செல்வது பாதுகாப்பில்லை எனவும் அதனால் ஹெலியில் அழைத்து செல்ல உள்ளதாகவும , ஆனாலும் ஹெலியை இறக்க கூடிய ஸ்ரேடியத்தடியும் பாதுகாப்பில்லை என கதைப்பதாகவும் கூறினார்.
பின்னர் என்னை அங்கே தடுத்து வைத்திருந்து விட்டு நள்ளிரவு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள்.
பின்னர் அங்கிருந்து 20ஆம் திகதி என்னை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த அழைத்து சென்றார்கள். ஆங்கில படங்களில் வாறது போன்று பல வாகன தொடரணி பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
அப்படி ஒரு பாதுகாப்பை நான் என் வாழ்நாளில் அதற்கு முதல் பார்த்ததில்லை என அவர் மன்றில் சாட்சியமளித்திருந்தார்.