உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாமல் போகலாம் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அதற்கான தேர்தலை நடத்த முடியும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
எனினும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையில், 9ஆம் திகதி அரசப் பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
இதற்கான கோரிக்கையை பரீட்சைகள் ஆணையாளர் தம்மிடம் விடுத்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எமது செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த மாற்றுதினம் இல்லை என்பதால், அடுத்த வருடம் ஜனவரி வரையில் தேர்தலை பிற்போட நேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இன்று சபாநாயகர் கைச்சாத்திடவுள்ளார்.
சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மதியம் அவர் குறித்த சட்டமூலத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் கடந்த 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
எவ்வாறாயினும் மகிந்த அணியினர் குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.