‘சசிகலாவை பதவியில் இருந்து தூக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று எடப்பாடி தரப்பு ஆதரவு அமைச்சரான நடராஜன் மொபைல் போனில் தினகரன் ஆதரவாளருடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.
இதனால் தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’களில் ஒருவராக அமைச்சர் நடராஜன் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சர் நடராஜன் திருச்சியைச் சேர்ந்தவர். இவர் சுற்றுலா துறை அமைச்சர் பதவி வகித்து வருகிறார்.
இதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் சசிகலாவை ஆதரித்து பேசியிருப்பது, எடப்பாடி அணியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுமட்டும் அல்லாது இன்னமும் சசிகலாவை நீக்குவது குறித்த தீர்மானத்தை ஆலோசனையின் போது எடப்பாடி தரப்பு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சசி குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம் என்று கூறுவது எல்லாம், மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற வேண்டும் என்பதற்காகவும்,
சின்னத்தை பெற முயற்சிக்க பன்னீர் செல்வதை தம் பக்கம் இழுக்கும் முயற்சிக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணமாகி உள்ளது.
இதனை உறுதி படுத்தும் வகையில் அமைச்சர் போனில் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில்
‘சின்னம்மா பொறுத்த மட்டும், அவங்க அம்மாவுடன், 33 ஆண்டு இருந்தவங்க. யாராலும் அப்படி இருக்க முடியாது.
அவங்க உண்மையில் தியாகம் செய்தவங்க தான்’ என்று இறுதி வரை புகழாரம் சூட்டியவாறே பேசி இருக்கிறார்.
இவரது மாவட்ட செயலர் பதவியை பறிப்பதாக தினகரன் அறிவித்த நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக மொபைல் போனில் தினகரன் ஆதரவாளருடன் நடராஜன் பேசியது, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் விமர்சகர்கள், தமிழகத்தில் நடப்பது எல்லாமே தீர்மானிக்கப்பட்ட நாடகம்.
இது அரங்கேறவில்லை என்றால் நான்கு வருடம் ஆட்சியை கொண்டே செல்வதே கடினம். அதனை திசை திருப்பி மக்களின் மன ஓட்டங்களை மட்டுப்படுத்தவே இது போன்ற பரபரப்பு சம்வங்கள் அரங்கேறுவதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.