இரத்தினபுரி – இறக்குவாணை – படேயாய பிரதேசத்தில் 19 வயதுடைய உயர் தர மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
மதுபானம் அருந்துவற்கு பணம் பெற்று கொடுக்காமையின் காரணமாக குறித்த மாணவி சந்தேக நபரினால் கொலை செய்யப்பட்டுள்ளமை அறியவந்துள்ளது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரிடம், காவற்துறை மேற்கொண்ட விசாரணையின் போது, சந்தேக நபர் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் கல்விபயின்று கொண்டிருந்த போதே குறித்த மாணவி கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாணவியிடம் இருந்த 210 ரூபாய், கைபேசி மற்றும் வெள்ளி நிற மாலை ஒன்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
எவ்வாறாயினும் காவற்துறை மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் மதுக்கு அடிமையாகியுள்ளமை அறியவந்துள்ளது.
இந்நிலையில், மது பானம் அருந்துவதற்கு பணம் தேவைப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளமை அறியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் மனித கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நிலையில் விளக்கமறியலில் இருந்த நபர் என விசாரணைகளில் அறியவந்துள்ளது.
இரத்தினபுரி – இறக்குவாணை – படேயாய பிரதேசத்தில் இம் முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது கடந்த 24 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.
குறித்த மாணவியின் தாய் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில், அவர் தந்தையுடன் தனித்து வசித்து வந்துள்ளார்.
அவரது தந்தை வீட்டில் இல்லாத வேளையிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்தது.
அவரின் தந்தை இந்த சம்பவம் இடம்பெற்ற தினம் பிற்பகல் 3 மணியளவில் குடும்ப நண்பரொருவரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன் போது , மகளின் கைப்பேசிக்கு அழைப்பொன்றை மேற்கொண்ட போது அதில் வேறொரு நபர் பேசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ,சந்தேகத்தின் பேரில் உடனே வீட்டிற்கு விரைந்த தந்தைக்கு அவரின் மகளின் சடலத்தையே காணக்கிடைத்துள்ளது.