வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சட்டமா அதிபர் திணைக்களம் இயங்கியதாக நீதியமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதிமன்றமும், நிறைவேற்று அதிகாரமும் இணைந்து செயல்பட்ட ஒரு காலம் நாட்டில் இருந்ததாக கூறிய அவர், இது குறித்து அப்போது யாரும் பேசவில்லை எனவும் கூறியுள்ளார்.
புதிதாக நீதியமைச்சை பொறுப்பேற்றுள்ள தலதா அதுகோரள சுப நேரத்தில் நீதியமைச்சில் தனது பணிகளை இன்று ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை பாதுகாத்து நல்லாட்சியை உருவாக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றவுள்ளேன்.
எமது நேர்மை காரணமாகவே ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அந்த வகையில், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பேசுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தற்போது உரிமையுள்ளது.
நல்லாட்சியில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாட்டில் நீதிமன்றமும் நிறைவேற்று அதிகாரமும் இணைந்து செயல்பட்ட ஒரு காலம் காணப்பட்டது. அப்போது அதை பற்றி யாரும் பேசவில்லை.
வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் சட்டமா அதிபர் திணைக்களம் இயங்கியது. அப்போது யாரும் இதனை பற்றி கூறவில்லை.
இதற்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் செயல்பட்ட சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது சுயாதீன ஒரு நிறுவனமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.