உலகம் முழுவதும் இணையதளம் விளையாட்டுகள் நாள் தோறும் புதிது புதிதாக பரவி வருகிறது. நீல திமிங்கலம் என அழைக்கப்படும் இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர்.
நீல திமிங்கலம் விளையாட்டில் ‘50’ சவால்கள் அளிக்கப்படுகிறது. ரெயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம், தினம் 1 சவால் விடுக்கப்படுகிறது.
இந்த சவாலை செய்பவர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே, விளையாடுபவர்களை பற்றிய முழுமையான தகவல்களை விளையாட்டு நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.
விளையாட்டின் 50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யாவிட்டால் அவர்களை பற்றிய ரகசியம் வெளியிடப்படும் என்று மிரட்டப்படுகின்றனர்.
இதற்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. வட மாநில மாணவர்கள், இளைஞர்கள் பலர் இந்த விளையாட்டுக்கு கட்டுப்பட்டு பல விபரீத முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த ஆபாயகரமான விளையாட்டிற்கு இந்தியாவில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டுக்காக தற்கொலை செய்துள்ளார். புதுவை பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சசிக்குமார் போரா (வயது 23) என்ற மாணவர் இந்த கல்வி ஆண்டில் எம்.பி.ஏ. சேர்ந்துள்ளார். அவர் கண்ணதாசன் மாணவர் விடுதியில் விடுதிகளில் தங்கி பயின்று வருகிறார். இந்நிலையில் சசிக்குமார் போரா விடுதியின் பின்புறம் உள்ள மரத்தில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். விடுதி அறையில் இருந்த சசிக்குமார் போராவை காணாது உடன் இருந்த நண்பர்கள் தேடியபோது அவர் விடுதியின் பின்புறம் பிணமாக தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளனர்.
போலீசார் சசிக்குமார் போராவுடன் தங்கியிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் சசிக்குமார் செல்போனில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை விளையாடி வந்ததை தெரிவித்துள்ளனர்.
அதோடு கடந்த 2 தினங்களாக சசிக்குமார் போரா யாருடனும் பேசாமல் “மூட்-அவுட்டாக” இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு உணவுக்கு பிறகு சக மாணவர்களுடன் சசிக்குமார் போரா மகிழ்ச்சியாக உரையாடியுள்ளனர்.
இரவு தூங்க செல்லும் வரை அவர் அனைவருடனும் பேசியபடி இருந்துள்ளார். இதனால் சக மாணவர்களுக்கு எந்த சந்தேகமும் எழவில்லை. அனைவரும் தூங்கியபிறகு நடுநிசியில் மரத்தில் தூக்கு போட்டு தொங்கி உள்ளார்.
விசாரணைக்கு பிறகு போலீசார் மாணவன் சகிக்குமார் போராவின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். இதில் அவர் புளுவேல் விளையாட்டை விளையாடியுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து செல்போனை சைபர் கிரைம் போலீசாருக்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். தமிழக மாணவரை தொடர்ந்து புதுவை பல்கலைக்கழக மாணவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டால் தற்கொலை செய்துள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.