அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
சில சமயங்களில் சுவாரஸ்யமான சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு சமாளிப்பார். இது போன்ற ஒரு சுவாரஸ்யமான சர்ச்சைதான் அண்மையில் பின்லாந்திலும் நடந்துள்ளது.
பின்லாந்து நாட்டு அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கலந்துகொண்டிருந்தார்.
இதில், அருகருகே இரு பெண் ஊடகவியலாளர்கள் அமர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். இங்குதான் ட்ரம்ப் குழம்பி விட்டார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன் வெள்ளை மாளிகையில் நடந்த வேறு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்புக்கு ரஷ்யாவுடனான உறவு குறித்த கேள்வியை பவுலா வெலின் என்ற ஊடகவியலாளர் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துவிட்டு 10 நிமிட இடைவெளியில் பின்லாந்து நாட்டு அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு வந்துள்ளார் ட்ரம்ப்.
அந்த ஊடகவியலாளரும் வேறு ஒரு பத்திரிகையாளருடன் சேர்ந்து இந்தச் சந்திப்புக்கு வருகை தந்துள்ளார். இந்தச் சந்திப்பில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ பேசத் தொடங்கியதும், அமெரிக்க ரஷ்ய உறவு குறித்து மற்றொரு பெண் ஊடகவியலாளரிடம் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் ட்ரம்ப் உடனடியாகக் குறுக்கிட்டு, “மறுபடியுமா” எனக் கேட்க, அதற்கு பின்லாந்து அதிபர், இந்த ஊடகவியலாளர் வேறு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது என ட்ரம்பிற்கு விளக்கியுள்ளார்.
வழக்கம்போல ஒரு சிரிப்புடன் சமாளிக்க முயற்சித்தார் ட்ரம்ப், அதற்கு அந்த நிருபர், பின்லாந்தில் நிறைய பேர் ஒரே மாதிரியான Blonde (பழுப்பு நிற தலைமுடி) நிறத்தில்தான் இருப்போம்.
அதனால்தான் உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கும் எனச் சொல்லி ட்ரம்ப்பை வாயடைக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து சிரித்துக்கொண்டே சந்திப்பைத் தொடர்ந்தார் ட்ரம்ப்.
பின்னர் அந்த ஊடகவியலாளர் ட்ரம்பிடம், ரஷ்யாவுடனான உறவு குறித்து கேட்கையில், பின்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே ரஷ்யாவுடன் நல்லுறவுடன்தான் இருக்கின்றன.
இதனைத் தொடரவே விரும்புகிறோம், ரஷ்யா அணு ஆயுத நாடு. அதனுடன் நட்பு பாராட்டுவது நல்ல விடயம்தான். பின்லாந்து மீது ரஷ்யா நிறைய மதிப்பு வைத்துள்ளது. எங்கள் உறவு மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.
ட்ரம்பைப் பொதுமேடைகளில் விமர்சிப்பது என்பது தொடர்ந்து வருகிறது. ட்ரம்பும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். தலைவர்களுடனான சந்திப்பில் கை கொடுப்பது தொடங்கி ஒப்பந்தத்தில் கையொப்பமிட பேனாவைத் திறப்பதுவரை விமர்சனங்களுக்குள் மாட்டிக்கொள்கின்றார் ட்ரம்ப்.