புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர் என அமெரிக்காவிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது.
அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறிப்பாக, அரசமைப்புச் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் பற்றி அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கு சம்பந்தன் விளக்கமளித்தார்.
முரண்பாடுகளுக்கான பின்னணி பற்றி சம்பந்தன் தெளிவுபடுத்துகையில்,
நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளால் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டில் எங்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 1.5 மில்லியன்களுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது உரிய கௌரவத்துடன் வாழவேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் நாட்டுக்குத் திரும்பிவர வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களினதும் கௌரவத்தைக் காப்பாற்றுவதாகவும், பேணக்கூடியதாகவும் அமையக்கூடிய புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை அரசமைப்பை உருவாக்குவதில் அதிகளவான ஆரம்பகட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் தோல்வியடைய இடமளிக்கப்படக்கூடாது எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரப் பங்கீடு தொடர்பான ஒழுங்குகள் பற்றி சம்பந்தன் கருத்துரைக்கையில்,
இதய சுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக அவை அமையவேண்டும்.
சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்லர், ஆனால், சில அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
நாங்கள் நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால், நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாங்கள் இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள் என்றும், இந்த நாடு தங்கள் எல்லோருக்கும் சொந்தமானது என்றும் உணரக்கூடிய வகையில் புதிய அரசமைப்பு அமைய வேண்டும்.
இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒவ்வொருவரும் கணிக்கப்பட்டதைப்போல இனிமேலும் நாங்கள் கணிக்கப்படக்கூடாது. இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் சமமானவர்களாகவும், கௌரவமானவர்களாகவும் நாம் கணித்துச் செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது, உயர்ந்தளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இது.
புதிய அரசமைப்புக்குப் பல்வேறு கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக நாட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
இலங்கை அரசானது இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தக் கருமத்தை நிறைவேற்றுவதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர்.
அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது, இனிமேலும் இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய அதிகாரப்பகிர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும் என்று இதன்போது சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
எல்லா மாகாணங்களிலும் உள்ள முதலமைச்சர்கள் தமது மாகாணங்களுடன் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்குத் தமக்கு மேலும் அதிகாரங்கள் வேண்டுமெனத் தெரிவித்திருப்பதாகவும் நாம் அறிகின்றோம் என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியார் காணிகளை விடுவித்தல் தொடர்பாக சம்பந்தன் தெரிவிக்கையில்,
இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்குக் கையளிக்கப்படவேண்டும். அக்காணிகளுக்குத் திரும்பிவருவதற்கு அவர்கள் உரிமையுடையவர்கள். மக்கள் தமது காணிகளைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் இவ்வேளையில் ஆயுதப்படையினர் இந்தக் காணிகளில் தங்கியிருந்து அதனைத் தமது உபயோகத்துக்குப் பயன்படுத்தமுடியாது.
கொடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக அரசு உத்தரவாதம் அளித்திருந்தபோதும் அந்தச் சட்டம் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை என்பதையும் அலிஸ் வெல்ஸ் அம்மையாரின் கவனத்துக்கு சம்பந்தன் கொண்டுவந்தார்.
இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் நியாயமற்ற வகையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மைத்திரி ரணில் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் சம்பந்தனும் சுமந்திரனும் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பின் நிறைவில் அலிஸ் வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவுக்கும் அதன் தலைவருக்கும் நன்றி கூறினார்.
கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு தலைவரைச் சந்திக்கக் கிடைத்தமையையிட்டு நான் பெருமையடைகின்றேன் என்றும் அலிஸ் வெல்ஸ் தெரிவித்தார்.
கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமெரிக்க அரசு, இலங்கை அரசுடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் எனவும் அலிஸ் வெல்ஸ் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் உடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் மற்றும் அமெரிக்கத் தூதரக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.