34 வயதான சந்திரகுமார் கிருஷ்ணவதனன் தனது மூன்று பிள்ளைகள், மனைவியுடன் கல்முனையில் வசித்து வருகின்றார்.
மேசன் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த மே மாதம் தொழில் நிமித்தம் கொழும்பு சென்றார்.
இரண்டு சிறுநீரகங்களும் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட தனது 2 வயது குழந்தையின் சிகிச்சைகளுக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கும் நோக்கில், கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் அவர் சேவையாற்றி வந்தார்.
எனினும், கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி இரவு துரதிர்ஷ்டவசமாக அவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தன்னுடன் ஒன்றாக தொழில்புரிந்த நெருங்கிய நண்பர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கிருஷ்ணவதனன் தெரிவித்தார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அவரை அனுமதித்துள்ளனர்.
அசிட் தாக்குதலினால் முகம் முற்றாக எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவதனனுக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சத்திரசிகிச்சையின் ஊடாக கிருஷ்ணவதனனின் இரண்டு கண்களும் முற்றாக சதையினால் மூடப்பட்டன.
எனினும், தவறுதலாக இவ்வாறு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தனது வலது கண்ணில் உணர்வுகள் காணப்படுவதாகக் கூறும் கிருஷ்ணவதனனின் குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
கண் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை பெறப்பட்ட பின்னரே வழமையாக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சந்திரசிகிச்சையில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அது தொடர்பில் நேரடியாகவோ எழுத்து மூலமாகவோ முறைப்பாடு செய்யப்பட்டால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை தொடர்பில் ஆராய முடியும் என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கிருஷ்ணவதனனின் இந்த நிலையினால் அவரது குடும்பத்தினர் தற்போது நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் சிகிச்சைகளுக்கும், ஏனைய இரண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும்,அன்றாட வாழ்க்கைச் செலவிற்கும் தேவையான நிதியைத் திரட்டுவதில் பாரிய நெருக்கடியை இவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணவதனனின் இந்த நிலைக்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
அசிட் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், கல்முனை பொலிஸாருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு, சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக இருந்த கிருஷ்ணவதனன், தற்போது தனது குடும்பத்தை தாங்கி நிற்க முடியாதவொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உணர்வுகள் விளங்கும் தனது வலது கண்ணின் பார்வையையேனும் பெற்றுத்தருமாறு இவர் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா?