அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணி 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் கலந்து கொள்ளுமா என்பதே இலங்கை ரசிகர்களின் தற்போதைய பாரிய கேள்வி.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் 4-0 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்துள்ளதால் உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தரவரிசைப்படி, 78 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 9 ஆவது இடத்திலும், 87 புள்ளிகளுடன் இலங்கை 8 ஆவது இடத்திலும் உள்ளன.
தற்போதைய நிலையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து ஆகியவை உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெற்று விட்டன.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 2 போட்டிகளில் இலங்கை வென்றிருந்தால் உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு காணப்பட்டது.
எனினும் அந்த வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை, இன்று நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 88 புள்ளிகளை பெற்றுக் கொண்டு உலக கிண்ணத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
எனினும், அயர்லாந்துடன் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது, 5 -0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் எனில் உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெற்றுக் கொள்ளும்.
குறித்த போட்டித் தொடரில் ஒரு போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றாலும் இலங்கை உலககிண்ணத் தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
இதேவேளை, இன்று நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை தோல்வி பெற்றால், மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரினை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் நிலையிலும், மேற்கிந்திய தீவுகள் அணி நேரடியாக உலக கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக் கொள்ளும்.
அதன் படி இலங்கையின் உலககிண்ணக் கனவு மேற்கிந்தியாவின் தோல்விகளில் தங்கியுள்ள அதேசமயம், இன்றைய போட்டி இலங்கைக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.