வித்தியா படுகொலை தொடர்பில் நாமலின் பதிவுக்கு விஜயகலா பதிலடி!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ் குமாரை காப்பாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்ததாக தெரிவித்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ede

இந்த நிலையில் “சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும்” என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை பதிவேற்றியிருந்தார்.

இதற்கு பலரும் தமது தரப்பு கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் பதில் தெரிவித்துள்ளார்.

“உங்களது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைகின்றது. நீங்கள் முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு டுவிட்டரில் பதிவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் சட்டத்தின்படி பொது மக்களின் வன்முறைகளையே தடுத்து நிறுத்தினேன். இலங்கையின் சட்டம் ஒரு சிலருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கக்கூடாது” என பதில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தான் காப்பாற்றியதாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.” என ஒரு கருத்தையும்,

“சிறுவர் விவகார அமைச்சரே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. உடனடியாக பதவி விலகி, விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.” என நாமல் நேற்று 2 பதிவுகளை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dnc

iejd