வவுனியா – குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் சற்றுமுன்னர் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்றைய தினம்(03) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அதன் உரிமையாளரை தாக்கியதுடன் பல பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
பின்னர் வாள்களுடன் வீதிக்கு வந்த குறித்த குழு வீதியால் செல்பவர்களை மறித்து அவர்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி கப்பம் கோரியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய வலுவூட்டல் நிலைய உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கும்போது குறித்த குழு” நீதிபதி இளஞ்செழியனை போடப்போன எங்களுக்கு நீ எம்மாத்திரம்” என கூறி தாக்கியதாக கூறியுள்ளார் .
வயதில் குறைந்த குறித்த குழுபோன்ற சில குழுக்கள் தொடர்ச்சியாக வவுனியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதுடன் பல குற்றச் செயலிலும் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவிலும் ஆவா குழுவினரின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர் அத்துடன் கடந்த சிலநாட்களாக வவுனியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.