யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.
மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நேற்று மாலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தமிழ்மக்களுக்கு பெரும் துயர்களை அளித்த பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம், ஏன் அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை, இந்தக் கூட்டத்தில், பங்கேற்றவர்கள் மத்தியில் ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விநியோகித்திருந்தார்.
அப்போது, அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனும், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கௌரிகாந்தனும், ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து வெளியேற்றினர்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, ஊடகவியலாளர் பரமேஸ்வரன், யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.