டிசெம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் – பரீட்சை ஆணையாளர்

வரும் டிசெம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால், கபொத சாதாரண தரப் பரீட்சைகள் பாதிக்கப்படும் என்று சிறிலங்காவின் பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

dcbh

எனவே, கபொத சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் காலத்தை அண்டியதாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் என்று, அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் டிசெம்பர் 9ஆம் நாள் நடத்தப்படலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்த நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

”கபொத சாதாரண தரப் பரீட்சைகள் வரும் டிசெம்பர் 12ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஒருங்கிணைப்புப் பணியகங்கள், டிசெம்பர் 10ஆம் நாள் திறக்கப்படும். பெரும்பாலான பாடசாலைகள், இந்த பரீட்சை மையங்களாகச் செயற்படும்.

கபொத சாதாரண தரப் பரீட்சை நாட்களை அண்டியதாக உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தலுக்குப் பிந்திய செயற்பாடுகள், வன்முறைகளால், பரீட்சை செயற்பாடுகள் பாதிக்கப்படக் கூடும்.” என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.