நடத்தப்பட்ட போரில் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன – சரத் பொன்சேகா

குட்டை குழம்பினால் மீன்பிடிப்பது இலகுவானதுதான் என்பது இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இடையிலான கருத்து மோதல்களைப் பார்க்கும் போது தெளிவாகவே தெரிகின்றது.

mnbn

பொதுமக்களுக்கு எந்த இழப்புகளும் இல்லாத போர் என்று வெளி உலகுக்குப் பறை சாற்றப்பட்டு நடத்தப்பட்ட போரில் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்கிற உண்மை சற்றே கசிந்திருக்கிறது.

இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் மீது போர்க்குற்ற வழக்கு பிரேசில் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டமையே குட்டையில் எறிந்த கல்லாகி விட்டது.

அதைத் தொடர்ந்து அந்தப் போருக்குக் கட்டளையிட்டவர் பொன்சேகா தான், அவரிடம் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெகத் ஜயசூரிய சொல்லப்போக, அதனால் கோபமடைந்த சரத் பொன்சேகா ஜெகத் ஜெயசூரிய ஒரு போர்க் குற்றவாளிதான் என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

இறுதிப் போரின் போது வன்னியில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்று தமிழர் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அதனால்தான் போர்க் குற்றம் தொடர்பில் பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசோ போர்க்குற்றங்கள் எவையும் நிகழவில்லை என்றும், அப்படி படையினர் எவராவது குற்றங்களைச் செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப் பட்ட வல்லுநர்கள் குழு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபை என்பவை இறுதிப் போரில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையிலானோர் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்த பின்னரும் போர்க் குற்றங்கள் நிகழவில்லை என்பதை அரசு திரும்பத் திரும்பக் கூறி வருகின்றது.

ஆனால் உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று உள்ளுர் மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்று கூறுவதற்கான நம்பகரமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று ஐ.நா. அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய நிலை யிலும் கொழும்பில் மாறி மாறி ஆட்சியிலிருக்கும் அரசுகள் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளன.

இப்போது போரை நடத்திய இராணுவத் தளபதியே தன் கீழ் பணியாற்றிய அதிகாரி ஒருவர் படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டார் என்பது தனக்குத் தெரிந்திருந்தது என்று கூறுகின்றார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இறுதிப் போரில் கைது செய்யப்படுபவர்களின் விவகாரங்க ளைக் கையாண்டவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவே என்றும், அப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் விடயத்தில் சில குற்றங்கள் அவரால் இழைக்கப்பட்ட தகவல்கள் தனக்குக் கிடைத்தன என்றும், அது தொடர்பாகத் தான் விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது தன்னைப் பதவியிலிருந்து அகற்றி விட்டார்கள் என்றும் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

அந்தக் குற்றங்கள் தொடர்பில் தன்னிடம் தகவல்கள் இருக்கின்றன என்றும், விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமாயின் அவை குறித்துத் தகவல்களைத் தான் வெளியிடுவார் என்றும் கூட பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

போரின் இறுதியில் கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், பொன்சேகாவின் கருத்து மிக முக்கியமானது.

போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களை அவர் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகின்றது.

பொன்சேகாவின் கருத்தை வெறுமனே நிராகரித்து, போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களை மறுத்து விடுவதன் மூலமும், ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றமற்றவர் என்று சொல்வதன் மூலமும் மட்டும் கொழும்பு இந்த விவகாரத்தைக் கடந்து செல்ல முடியாது.

போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் இப்போது கையிலேயே இருக்கும் நிலையில், நெய்யைத் தேடி அலைய வேண்டியதில்லை.

எனவே போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான பன்னாட்டு நீதி விசாரணை ஒன்றை இலங்கை அரசு உடனடியாகவே அனுமதிக்க வேண்டும்.

ஆதாரங்கள் இருக்கும் நிலையிலும், உள்ளுர் விசாரணையில் தமிழர்கள் நம்பிக்கையற்று இருக்கும் நிலையிலும் பன்னாட்டு விசாரணைக்கு அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும்.