வல்லரசு நாடுகளின் பாதுகாப்பு பெண்களின் தலமையில்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் சென்று தற்போது ஒரு நாட்டின் அரசியல் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரை பெண்களின் கரம் உயர்ந்து விட்டது.

இதற்கு உதாரணமாக தற்போது உலகின் 7 பலம் மிக்க நாடுகளின் பாதுகாப்பு பெண்களின் கைகளில் தங்கியிருப்பதை குறிப்பிட முடியும்.

பாதுகாப்புத் துறைகளில் வழக்கமாக ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், பல நாடுகள் தங்களது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பெண்களிடம் ஒப்படைத்துள்ளன.

ஜேர்மன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து போன்ற பெரிய நாடுகளில் பாதுகாப்பு அமைச்சு பெண்களிடம் காணப்படுகின்றது.

நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் நிர்மலா சீதாராமன். அவர் ஏற்கனவே வகித்து வந்த வர்த்தக துறை அமைச்சர் பதவியையும் தொடர்ந்து கவனித்துக் கொள்ளவுள்ளார்.

உர்சுலா வான் டெர் லீன்

ஜெர்மனியில் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சரான உர்சுலா, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இத்துறையைக் கவனித்து வருகிறார்.

ஏழு குழந்தைகளுக்கு தாயான இவர் ஒரு மருத்துவர் என்பதோடு 1999ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை சிறப்பானதொன்றாகும்.

மரைஸ் பெய்ன்

அவுஸ்திரேலியாவின் 53ஆவது பாதுகாப்புத் துறை அமைச்சரான மரைஸ் பெய்ன், அந்நாட்டின் பாதுகாப்புத் துறையை கவனித்துக் கொள்ளும் முதல் பெண் அமைச்சராக கருதப்படுகின்றார்.

சட்டம் படித்துள்ள மரைஸ் பெய்ன், 2015ஆம் ஆண்டு இப்பதவியை ஏற்றுள்ளார்.

மரியா டோலோரஸ் டி கோஸ்பெடால்

ஸ்பெயின் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரான மரியா நவம்பர் 2016ஆம் ஆண்டு தனது பாதுகாப்புத்துறை பதவியை ஏற்றுக்கொண்டார்.

ராபர்டா பினோட்டி

இத்தாலியின் பாதுகாப்பு துறை அமைச்சரான ராபர்டா, நவீன இலக்கியம் படித்தவர். இத்தாலியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக இவர் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 2014அம் ஆண்டு முதல் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

ஜீனைன் ஹென்னிஸ்

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜீனைன் வகித்து வருகிறார்.

புளோரன்ஸ் பார்லி

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் தனது புதிய அமைச்சரவையை உருவாக்கிய போது, அதில் பாதியிடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார்.

அப்போது சில்வே கவுல்டார்ட் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக சில்வே பதவி விலகியதையடுத்து புளோரன்ஸ் பார்லி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.