இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“வல்லுறவுகள், கொலைகளைச் செய்த சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். மனம்பேரி வல்லுறவு, எம்பிலிப்பிட்டிய மாணவர்கள் படுகொலைகளுக்கு காரணமானவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது, மக்களுக்கு ஆதரவாக அரசாங்கத் தலைவர்கள் முடிவுகளை எடுத்தார்கள். மக்களின் பக்கமே தலைவர்கள் எப்போதும் இருக்க வேண்டும்.
சிலர் என்னைத் துரோகி என்று கூறுகின்றனர். அனுராதபுர, பொலன்னறுவவுக்கு அப்பால் செல்லப் பயந்தவர்கள் தான் அவ்வாறு கூறுகின்றனர்.
நான் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் தான், மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுகிறார்கள். ஊடகங்களும் தமது விருப்பப்படி எழுதுகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வந்த நான் துரோகி என்றால், நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், வெள்ளை வான்களில் கடத்தி மக்களைக் கொலை செய்தவர்கள், ஊழல்கள், மோசடிகள் செய்தவர்கள் எல்லாம் தேசப்பற்றார்களா?
தேசப்பற்றாளர்கள் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது.
நான் இராணுவத்தில் இருந்த இரண்டு இலட்சம் படையினருக்கு உத்தரவுகளை வழங்கினேன். அவ்வாறான இராணுவத்தில் இருந்த ஒருவர் தான் ஜெகத் ஜயசூரிய. அவர் போர் நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருக்கவில்லை.
இராணுவத் தளபதி சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பொறுப்பாவார்.
மக்களின் பிரதிநிதிகளாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர்.
கடந்த காலத்திலோ, தற்போதோ இராணுவத்தில் மாற்றம் இருக்கவில்லை. தவறு செய்த மேஜர்களும், கப்டன்களும், தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டர்.
கடந்த காலத்தில் அரசாங்கத்தின் தலைவர்கள் மக்களின் பெயரில் நடவடிக்கைகளை எடுத்தனர் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று செயற்பட்டனர்.
ஒரு நபர் போர் வீரராக இருக்கிறார் என்பதற்காக மக்களின் எதிர்பார்ப்புகளை நொருக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு தலைவரும் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.