விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், நந்தகுமாரின் ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய்ராய், சிம்ரன், ஆண்ட்ரியா, அனுஇமானுவேல், ஜான்விஜய், கே.பாக்யராஜ் முதலானோர் நடித்துள்ளனர். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் முதல் படமான இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் சமீபத்தில் நடைபெற்றது.
சென்சாரில் துப்பறிவாளனுக்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். சென்சார் வேலைகள் உட்பட அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, இப்படத்தை இம்மாதம் 14-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிடவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இந்த வருடத்தில் விஜய்யின் ‘பைரவா’, சூர்யாவின் ‘சிங்கம்-3’, அஜித்தின் ‘விவேகம்’ என பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் வியாழக் கிழமைகளில் வெளியாகி வரும் நிலையில் இப்போது விஷாலின் ‘துப்பறிவாளன்’ திரைப்ப்டமும் வியாழக் கிழமை வெளியீடாக வரவிருக்கிறது. இந்த பட ரிலீஸுக்கு அடுத்த நாள் (செப்டம்பர்-15) ஜோதிகாவின் ‘மகளிர்மட்டும்’, சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள்-2’ உட்பட வேறு சில படங்களும் வெளியாகவிருக்கிறது.