முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்சல் சாரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கூட்டு எதிர்க்கட்சி கவனம் செலுத்தி வருகின்றது.

Fonseka

சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாக சரத் பொன்சேகா அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்தமையே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் காரணமாகும்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி இது குறித்து விரிவாக ஆராயத் தீர்மானித்துள்ளனர். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

போர் மற்றும் படைவீரர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு முரணான வகையில் அமைச்சர் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டு வருகின்றார். முடிந்தால் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக எடுத்த தீர்மானத்தைப் போன்றே சரத் பொன்சேகா தொடர்பிலும் அரசாங்கம் எடுத்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.