ஜனாதிபதியின் செயற்பாடு : தமிழர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீதோ, வேறு படைத் தளபதிகள் மீதோ, வேறு எந்தப் படையினர் மீதோ போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்குத் தான் அனுமதிக்க மாட்டார் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

images (1)

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்தக் கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்தார். இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன் என்பதே அவர் சொல்லியவற்றின் சுருக்கம்.

இதன் மூலம் போர்க்குற்ற விசாரணை, நீதி, பொறுப்புக்கூறல் எவையும் இலங்கையில் நிகழப் போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி விட்டார். சில நாட்களின் முன்னர் தான், இலங்கையின் பாணியில் மிக மெதுவாகவே பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

தன்னைச் சந்தித்த ஊடக ஆசிரியர்கள் மற்றும் பிரமுகர்களின் மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார். இப்போதோ, இராணுவத் தளபதி அல்லது படைத் தளபதிகள் அல்லது எந்தவொரு படையினர் மீதும் போர்க் குற்றச்சாட்டின் பேரில் கைவைக்க வெளிநாட்டுக்கோ, நபருக்கோ, அமைப்புக்கோ இடமளிக்கப்பட மாட்டாது என்கிறார்.

பிரேசில் நாட்டுத் தூதுவராக இருந்தவரான முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது அந்த நாட்டில் போர்க் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள கொந்தளிப்பு நிலையிலேயே அரச தலைவர் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்.

தளபதிகள், படையினர் மீது கை வைக்காமல் எப்படி போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவது என்பதை அவர் விளக்கவில்லை. இறுதிப் போரின் போது இலங்கையில் நிகழ்ந்தது சிறு தவறுகளோ குற்றங்களோ இல்லை. அவை திட்ட மிடப்பட்ட போர்க் குற்றங்கள். நன்கு அலசி ஆராயப்பட்டு கொள்கை முடிவுகளின் ஊடாக நகர்த்தப்பட்ட படுகொலைகள். மனித உரிமைகளின் மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்.

பன்னாட்டுச் சட்டங்களின்படி, இத்தகைய போர்க் குற்றங்களில் கட்டளைப் பொறுப்பின் அடிப்படையில் தளபதிகளும் அரசியல்வாதிகளுமே கூட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தான். அவர்கள் களத்தில் நேரடியாகக் குற்றங்களில் ஈடுபடவில்லையென்றாலும், கட்டளைப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்களும் குற்றவாளிகள் தான். ஆக, தளபதிகள் மீது கைவைக்காமல் நீதி விசாரணை ஒன்று நடக்கப் போவதில்லை.

போர்க் குற்ற விசாரணைகளில் வெளிநாட்டுப் பங்களிப்பை நிராகரித்து, இந்தியாவின் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில், தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய விசாரணைப் பொறிமுறை ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும் என்று அரச தலைவர் கூறியிருந்தார். தளபதிகள் மீது கைவைக்காத எந்தவொரு நீதி விசாரணையும் தமிழ் மக்களின் நம்பிக்கையை நிச்சயமாகப் பெறப் போவதில்லை. அப்படியிருக்கும்போது தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய உள்நாட்டு விசாரணையொன்று எப்படிச் சாத்தியமாகும்?

அதனால்தான் பன்னாட்டு விசாரணையே வேண்டும் என்று தமிழர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள். அரச தலைவரின் நேற்று முன்தினப் பேச்சு, போர்க் குற்ற நீதி விசாரணைகள் தொடர்பில் தமிழ் மக்களிடம் காணப்பட்ட கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. கொழும்பின் எந்த அரசாக இருந்தாலும், குற்றமிழைத்த தளபதிகளையும் படையினரையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் போது உள்நாட்டு நீதி விசாரணை என்பது முழுவதும் கேலியானது.

ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மானம் கூறும் கலப்பு விசாரணை என்பதும் நடக்கப் போவதில்லை. ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலக நாடுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போது, அது நடைபெறவே போவதில்லை என்பதும் அரச தலைவரின் பேச்சு மூலம் வெளிப்படையாகிறது என்றால், நீதியைத் தேடவும் நிலைநாட்டவும் தமிழர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?