இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையி லான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை 3–-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5–-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி வைட்வொஷ் செய்தது.
இந்நிலையில் இலங்கை – இந்திய அணிகள் மோதும் ஒரேயொரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இருபதுக்கு 20 போட்டியிலும் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி இருபதுக்கு 20 போட்டியிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் மிகவும் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இருபதுக்கு 20 போட்டிகளில் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் 6 போட்டிகளில் இந்தியாவும், 4 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா இணைக்கப்பட்டுள்ளார். அத்தோடு இந்தப் போட்டியில் இலங்கை அணி நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள ரசிகர்களுக்கு இலங்கை அணி உற்சாகத்தைக் கொடுக்குமா என்று.
இலங்கை: உபுல் தரங்க (அணித் தலைவர்), அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, டில்ஷான் முனவீர, தஷுன் சானக்க, மிலிந்த சிறிவர்த்தன, வனிது ஹசரங்க, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, இசுரு உதான, சீகுகே பிரசன்ன, திஸர பெரேரா, மலிங்க, சுரங்க லக்மால், விகும் சஞ்சய.
இந்தியா: விராட் கோஹ்லி (அணித் தலைவர்), ரோஹித் ஷர்மா, ரஹானே, கேதர்ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, ராகுல், அக்ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சாகல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர்.