கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் நடந்த கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்துக்கான அரசதரப்பு பிரதிநிதிகள் குழுக்களின் ஏழாவது மாநாட்டிலேயே சிறிலங்கா தூதுவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் பிரகடன மாநாட்டில் கலந்து கொண்டு வருகிறது.
விரைவில் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக சிறிலங்கா உறுதியளித்திருப்பதை, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வதற்கும், கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கும் ஆதரவாக பரப்புரைகளை மேற்கொள்ளும் நாடுகளும் அமைப்புகளும் வரவேற்றுள்ளன.
சிறிலங்கா கொத்தணிக் குண்டுகளை உற்பத்தி செய்யவதோ ஏற்றுமதி செய்வதோ இல்லை என்ற போதிலும், இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.