எதற்கும் அஞ்ச வேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்குச் சார்பாக பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையிலேயே ஜகத் ஜயசூரியவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பன்னாட்டு மட்டத்தில் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்படுமானால் இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை வகித்தவன் என்ற வகையில் உங்களுக்கு சார்பாகச் செயற்படுவேன். அத்துடன், பன்னாட்டுச் சட்ட திட்டங்கள் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜகத் ஜயசூரிய குற்றமிழைப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவு இருந்திருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.