வரலாற்று ரீதியில் தொன்மை மிக்க புராதனச் சின்னமாக விளங்கும் யாழ். கோட்டையை படையினர் நிலை கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடக அறிக்கை ஒன்றை இன்றைய தினம்(06) விடுத்துள்ளார். குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்.கோட்டை என்பது எமது பகுதியில் இருக்கக்கூடிய புராதன வரலாற்று அடையாளங்களுள் ஒன்றாகும். தற்போது யாழ்.மாவட்டத்தில் பொது மக்களுக்கு சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, மாவட்டத்தின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்பவும் பொருளாதார ரீதியில் பெறுமதியற்றதான அரசுக்குரிய தரிசு நிலங்களுக்குள் நிலை கொள்ளத்தக்க ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதைவிடுத்து, வரலாற்று ரீதியில் புராதனச் சின்னமாக விளங்கும் யாழ். கோட்டையை படையினர் நிலை கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரது இருப்புகள் அமைந்துள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்பவே அவை அமைந்திருக்க வேண்டும்.
மேற்படி படைகள் நிலை கொண்டிருக்கக் கூடிய காணி, நிலங்கள் கடற்றொழில், விவசாயச் செய்கைகள் போன்ற எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய வளங்களைக் கொண்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான காணி, நிலங்களாக இருக்கக்கூடாது என்பதையும் எமது நிலைப்பாடாக நாம் மிகத் தெளிவாகவே முன்வைத்து வருகின்றோம்.
கடந்த கால அசாதாரணச் சூழ்நிலைகளின் போது பாரிய சேதங்களுக்கு உட்பட்டிருந்த மேற்படி கோட்டையையும், அதனது சுற்றுப் புறங்களையும் மீளப் புனரமைப்புச் செய்வதற்கு கடந்த காலங்களில் நாம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு, போதியளவில் அதனை நிறைவேற்றியும் வந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் எஞ்சியிருக்கின்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பில் பிரதமரின் அவதானத்திற்கும் கொண்டு வந்துள்ளதுடன், தற்போது அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழுலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருகின்ற ஓர் இடமாகவும் யாழ். கோட்டை விளங்கி வருகின்றது.
இத்தகையதொரு நிலையில், அதனை மீள படைகளின் தேவைகளுக்காக வழங்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது தொன்மைகளையும், கலாச்சார பாரம்பரியங்களையும் அழிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட நாம் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் கலாச்சார, பாரம்பரியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டிலிருந்தே ஏற்கனவே கடந்த கால அனர்த்தங்கள் காரணமாக அழிக்கப்பட்டவற்றை நாம் ஆக்கப்பூர்வமான நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், படைகளின் தேவைகளுக்காக யாழ்.கோட்டையைப் பயன்படுத்து தொடர்பிலான கருத்துக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.