இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.
உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.
இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.
பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.
பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.
இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த இடம் ‘திருவிற்குடி’ என்றத் திருத்தலமாகும். துளசித்தாய் தோன்றிய திருவிற்குடி சிவதலம் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ளது. ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி சிவபெருமானின் அட்டவிராட்டான தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் பிருந்தையை திருமால் துளசியாக ஏற்றுக் கொண்ட தலம். இக்கோவிலில் இறைவன் பெயர் விரட்டானேசுவரர். இறைவியின் நாமம் ஏலவார் குழலி பரிமளநாயகி. தலமரம் துளசி.