விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களாக செயற்பட்ட புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் உயிரிழந்து விட்டார்கள் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த அவர்களினது உடலங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக இருந்து ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக அந்நாட்டில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் இருந்து நாடு திரும்பியுள்ள அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார். புலிகளின் திருகோணமலைத் தளபதியாக இருந்த தனது கணவன் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவர் சென்றதற்கு தான் சாட்சியாக இருப்பதாகவும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறுகின்றார்.
இப்போதும் அவர் கணவனை தேடிக்கொண்டிருக்கின்றார். அவருக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?” என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், யார் அவர்? புலித்தேவனா? அவர் ஒருபோதும் சரணடைந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டார். நடேசனும் இறந்து விட்டார்.
அவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது என நினைக்கின்றேன் என அவர் பதிலளித்திருந்தார். எனினும், நாங்கள் எழிலன் பற்றியே கேள்வியெழுப்புவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, மீண்டும் பதிலளித்து பேசிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய, எழிலனுடன் அனந்தி இருந்திருப்பாராக இருந்திருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்பதை அனந்தி சசிதரன் அறிந்திருக்க வேண்டும்.
எனினும், விபரங்கள் குறித்து நான் இப்போதும் அறியவில்லை. வெள்ளைக்கொடியுடன் அவர் வந்ததாக கூறுகின்றார்.
எவ்வாறாயினும், சரணடைந்த அனைவரும் யாரால் புனர்வாழ்வளிக்கப்பட்டார்கள் என்பதற்கான பட்டியலில் இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.