போர்க்குற்றம் தொடர்பான ஜனாதிபதியின் மாற்றத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சியில் தமிழ் மக்கள்

போர்க்குற்றம் புரிந்த படையினர் மீது எவரும் கைவைக்க முடியாது என இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sjjx

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவிர்ந்த வேறு எவர் இதைக் கூறியிருந்தாலும் தமிழ் மக்கள் அது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இதைக் கூறியவர் ஜனாதிபதி மைத்திரி. இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்ட ஒரு நல்ல மனிதர் ஜனாதிபதி மைத்திரி என்ற நம்பிக்கை இன்று வரை தமிழ் மக்களிடம் உள்ளது.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங் களைப் புரிந்து கொண்டவர் அவர். வலி. வடக்கில் நலன்புரி முகாம்களில் இருக்கின்ற மக்களின் வாழ்விடங்களுக்கு விஜயம் செய்து அவர்களின் அடுக்களைக்குள் நுழைந்து அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது வரை பார்த்தவர் அவர். அவரின் அச்செயல் தமிழ் மக்களை நெகிழ வைத்தது. இவ்வாறு பார்வையிட்ட பின்னர் தென் பகுதியில் இனவாதம் பேசுபவர்கள் ஒருக்கால் வட மாகாணத்துக்கு வந்து இடம்பெயர்ந்த மக்கள் படும் துன்ப துயரங்களை நேரில் பார்க்க வேண்டும்.

அவ்வாறு பார்த்தால் அவர்கள் இனவாதம் பேசமாட்டார்கள் என்று கூறியவர். தவிர, மாணவி வித்தியா படுகொலை செய் யப்பட்ட செய்தியறிந்தவுடன் யாழ்ப்பாணத்துக்கு விரைந்தோடி வந்து வித்தியாவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியவர். கல்லூரி மாணவிகளைச் சந்தித்து பயம் கொள்ளாதீர்கள் என்று அச்சம் களைந்தவர்.

இவ்வாறாக எப்போதும் தமிழ் மக்களின் விருப்புக்குரியவராக இருந்த ஜனாதிபதி மைத்திரியிடம் மனிதாபிமானம், நேர்மை, நியாயம் என்பன தாராளமாக இருந்தன. இதுவே அவர் மீது தமிழ் மக்கள் மதிப்புக் கொள்ளக் காரண மாயிற்று.

எச்சந்தர்ப்பத்திலும் வடக்கின் முதலமைச்சருக்கு மதிப்பளிப்பதில் அவர் இம்மியும் தவறி யதில்லை. ஒரு நேர்மையான அரசியல் தலைவர் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என்ற உயர்ந்த நினைப்பு ஜனாதிபதி மைத்திரியிடம் இன்றுவரை உள்ளது.

இதுவும் ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் நன்மதிப்புக் கொள்ளக் காரணமாயிற்று. தமிழ் மக்களின் விடயங்களில் ஜனாதிபதி மைத்திரி இன்னமும் எதையும் செய்யவில்லை என்ற கருத்தியல் இருக்கின்ற போதிலும் அவர் மீது தமிழ் மக்கள் கோபமோ ஆத்திரமோ கொண்டதில்லை என்பது அதிசயமான உண்மை.

நிலைமை இதுவாக இருக்கையில், போர்க் குற்றம் தொடர்பில் படையினரைக் காப்பாற்றுவது பற்றிய அவரின் கருத்து தமிழ் மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. நியாயம் உணர்ந்தவர் என்று தமிழ் மக்கள் கருதியிருந்த ஜனாதிபதி மைத்திரி சடுதியாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு எங்கள் அரசியல் தலைமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பது காரணமா?