வடமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 பேர் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எந்த வித இன அடிப்படையிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும், எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க இன்றைய அமர்வின் போது ஓப்பந்த, தொண்டர் அடிப்படையிலான ஆசிரியர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.
வடமாகாணத்தில் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் இல்லாததினாலும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்காததினாலும் அந்த பிரதேசத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதிகளை கொண்டவர்கள் குறைவாக காணப்படுவதினால் இந்த பிரதேசங்களில் ஒப்பந்த, தொண்டர் மற்றும் பகுதிநேர அடிப்படையில் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அமைச்சரவையினால் வடமாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்து சுமார் 3 வருட காலம் சேவையை கொண்டிருந்தவர்களை சேவையில் இணைத்துக் கொள்வதாக கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆசிரியர் சேவைக்கு தகுதி பெற்ற 339 பேர் இருந்தனர். இதற்கமைவாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை ஆவணத்தின் மூலம் சேவைக்காலத்தை நீடிப்பதற்காக தகுதி பெற்றோர் எண்ணிக்கை 676 வரையில் அதிகரித்தது.
தற்போது வடமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 167 ஆகும். இந்த ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இந்த ஆவணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இவர்கள் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர். இந்த பிரச்சினையில் அனைத்து தரப்பினருக்கும் நீதி கிட்டும் வகையில் செயற்பட கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எந்த வித இன அடிப்படையிலும், வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட மாட்டாது.எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.