மொழிப்பிரச்சனையால் திணறிய நடிகை

cd

நல்லா தமிழ் பேசுறியே! நீ போய் பம்பாய்ல ட்ரைய் பண்ணும்மா என நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தில் பெண்ணெருவரைப் பார்த்துப் பேசியிருப்பார். இவ்வாறான நிலைமை தான் இந்திய சினிமாவில் நீடிக்கிறது.

ஹீரோயின்களைப் பொறுத்தவரை மொழி ஒரு தடையே இல்லை. வெறும் கவர்ச்சிக்காக வந்துபோனால் சரி என்ற நிலை தான் சினிமாவில் இருக்கின்றது. அதையும் தாண்டி சிலர் நடிக்கவும் செய்கின்றார்கள் தான்.

தமிழ் சினிமாவின் இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் முன்னிலை நடிகைகளில் அநேகர் வேற்று மொழியைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை தமிழ் பேசும் நாயகிகளாக திரையில் ஏற்று ரசித்து கொண்டாடி மகிழ்கின்றோம்.

ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் நன்றாகப் பேசி நடிக்கக்கூடிய நடிகை தான் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்துப் படங்களுமே ஏதோவொரு வகையில் முக்கிய கதையம்சத்தை கொண்டதாகவே இருக்கின்றது.

இந்நிலையில், ஹிந்தித் திரையுலகில் டாடி என்ற படம் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஆங்கிலம், தமிழில் சரளமாக பேசக்கூடிய ஐஸ்வர்யா, ஹிந்தி படம் என்றதும் பயந்தார். அத்துடன் மராட்டிய மொழியிலும் இதை படமாக்க உள்ளதாக கூறியதும் பயந்துள்ளார். ஏனென்றால் இரண்டு மொழியும் அவருக்கு தெரியாது.

இதனால், இயக்குனரிடம் நேரம் கேட்டு ஹிந்தி, மராட்டி மொழிகளை கற்றுக்கொண்டு ஷூட்டிங்கிற்கு தயாரானார். ஆனபோதும் ஒவ்வொரு காட்சியும் அவருக்கு சவாலாகவே அமைந்திருந்ததாம்.

இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடிக்கும் அர்ஜூன் ராம்பால் கூறுகையில், பல காட்சிகளில் வசனங்கள் நன்கு பேசி நடித்தாலும் சில காட்சிகளை ஐஸ்வர்யாவால் ஓரிரு டேக்கில் முடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் மொழி பிரச்சனை தான் என்றார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது. சில காட்சிகள் 25 டேக்குகள் கூட ஆகின. ஆனாலும் பட குழுவினர் டென்ஷன் ஆகாமல் அமைதி காத்தனர்என்றார்.

பிறமொழி நடிகைகளே பயமில்லாமல் தமிழில் நடிக்கும் போது, ஐஸ்வர்யா ராஜேஷ் பயப்படுகின்றார். அதற்கு காரணம் வேறொன்றும் இல்லை தொழில் பக்தி தான் செய்யும் படத்தில், தன் நடிப்பில் எந்தவொரு பிழையும் வந்துவிடக்கூடாது என்பதே அவரின் பயமாக இருக்கிறது.