இராணுவச் சீருடை அணிந்த காரணத்துக்காக எவருடைய குற்றங்களையும் மறைக்க முடியாது – சரத் பொன்சேகா

இராணுவச் சீருடை அணிந்த காரணத்துக்காக எவருடைய குற்றங்களையும் மறைக்க முடியாது என்று பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

download (4)

போர்க்குற்றங்களுக்காக இராணுவத் தளபதி மீதோ, தளபதிகள் மீதோ, எந்தவொரு படையினரின் மீதோ கைவைக்க வெளிநாட்டு அமைப்புகளை அனுமதிக்கப் போவதில்லை என்று கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு மாநாட்டில் அவர் இதனை உரத்துச் சொன்னார். மைத்திரியின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதத்திலேயே சரத் பொன்சேகாவும் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

சீருடை அணிந்தார்கள் என்ற காரணத்துக்காக குற்றவாளிகள் தப்பிச் செல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அரசியல் தலைவர்களும், கௌரவ ஜனாதிபதியும் கூட தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் சரத் பொன்சேகா. பொன்சேகா ஓர் இராணுவவாதி. 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், கொழும்பில் அதிகாரத்தில் இருந்த ரணில் தலைமையிலான ஆட்சிக்கும் இடையே பன்னாட்டுக் கண்காணிப்புடனான அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்த காலத்தில், யாழ்ப்பாணத்தின் இராணுவத் தளபதியாக இருந்தவர்.

அமைதிப் பேச்சின் ஓர் அங்கமாக அமைக்கப்பட்ட உபகுழுக்களில் வடக்கு முனையில் இராணுவத்தின் சார்பில் தலைமை அதிகாரியாகக் கலந்து கொண்டவர். இராணுவ விடயங்களில் வடக்கு முனையில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் மறுப்புத் தெரிவித்து வந்தவர். அந்த உப குழுக்களால் பயனேதுமில்லை என்று விரக்தியடைந்து அதிலிருந்து புலிகள் வெளியேறும் அளவுக்குப் பிடிவாதத்து டன் இருந்தவர்.

ஒருவகையில் அந்த அமைதி நடவடிக்கைகளின் மீது புலிகள் நம்பிக்கையிழக்கவும், மீண்டும் போர் ஒன்றை நோக்கி அவர்கள் நகர்வதற்கும் ஆணிவேராக இருந்தவர்களில் முதன்மையானவராக சரத் பொன்சேகாவையும் குறிப்பிடலாம். அதன் மூலம் இறுதிப் போரில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவரும் அவர்தான்.

பின்னர் கோடுகளின் மூலம் முழுப்படத்தையும் வரைந்து பேரவலத்தை உருவாக்கியவரும் அவர்தான். இறுதிப் போரில் நடந்த மனிதப் பேரவலங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் அப்போதைய இராணுவத் தளபதி என்கிற வகையில் அவரும் பொறுப்பாளிதான்.

பன்னாட்டுப் போர்க்குற்றச் சட்டங்களின் அடிப்படையில் அனைத்துக் குற்றங்களுக்கும் கட்டளைப் பொறுப்பை ஏற்க வேண்டிய முதன்மை நபர்களில் அவரும் ஒருவர். அதை அவர் நிராகரிக்க முடியாது. நீதியான போர்க்குற்ற விசாரணை என்ற ஒன்று வந்தால், குற்றவாளிகள் பெயர்ப்பட்டியலில் பொன்சேகாவின் பெயர் வராமலிருக்க முடியாது. தனிப்பட்ட முரண்பாடு, மோதல் காரணமாக இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பொன்சேகா இப்போது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தக்கூடும்.

அதற்காக, அதன் பின்னால் உள்ள பாராதூரமான விளைவை அவர் அறியாமல் இருப்பார் என்று சொல்வதற்கில்லை. அதையும் தாண்டி அவர் சொல்கிறார் என்றால், அதன் உள்ளே நிறைய பொருள் பொதிந்த செய்திகள் இருக்கின்றன என்பது தான் அர்த்தம்.

தன்னைவிட போர்க்குற்றங்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் எண்ணுவதாலும் இப்படிக் கூறக்கூடும்.அந்த உண்மைகள் வெளியே வரவேண்டும்.

அதுதான் தமிழர்களின் தேவை. அதை மறைக்க தெற்கின் அரசியல் தலைவர்கள் முயற்சிக்கும் போது, அதற்கெதிரான அறச் சீற்றத்தைக் காட்டியிருக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களுமேயாவர்.

ஆனால் அது நடக்கவில்லை. கௌரவ ஜனாதிபதியின் கருத்துக்குக் கூட்டமைப்புச் சொல்லியிருக்க வேண்டிய பதிலை பொன்சேகா சொல்லியிருக்கிறார்.