நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று வியாழக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்ட பணிகளுக்காக 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவற்றில் ஐந்து பாடசாலைகளை முழுமையாகவும் 22 பாடசாலைகள் பகுதியளவிலும் பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடைபெற்றது.
இந்நிலையில் குறித்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்ட பணிகளுக்காக 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் அவற்றில் ஐந்து பாடசாலைகள் முழுமையாகவும் ஏனைய 22 பாடசாலைகள் பகுதியளவிலும் பயன்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு றோயல் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் வித்தியாலயம், கண்டி விஹாரமகா தேவி மகளிர் பாடசாலை, கண்டி சுவர்ணமாலி மகளிர் பாடசாலை, கண்டி சீதா தேவி மகளிர் பாடசாலை ஆகியன முழுமையாக பயன்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் கொழும்பு விசாகா கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, களுத்துறை வேளாப்புர மகா வித்தியாலயம், நீர்கொழும்பு புனித பீட்டர் மத்திய கல்லூரி, கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா ரத்னாவளி மகளிர் கல்லூரி, இரத்தினபுரி பேர்கசன் உயர்கல்லூரி, குருநாகலை மலியதேவ மகளிர் கல்லூரி, குருநாகலை மலியதேவ ஆண்கள் கல்லூரி, குளியாப்பிட்டி மத்திய கல்லூரி, கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம், அநுராதபுரம் மத்திய கல்லூரி, பொலன்னறுவை றோயல் மத்திய கல்லூரி ஆகியனவும் பகுதியளவில் பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் காலி வித்தியாலோக வித்தியாலயம், மாத்தறை சுஜாதா வித்தியாலயம், மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயம், ஹாலிஎல மஹா வித்தியாலயம், பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி வித்தியாலயம், மட்டகளப்பு வின்சன் மகளிர் மத்திய கல்லூரி, வவுனியா மத்திய கல்லூரி, யாழ்ப்பாண மத்திய கல்லூரி ஆகியனவும் குறித்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காகவும் பகுதியளவில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பணிகளுக்காக முழுமையாக மூடப்படும் ஐந்து பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதுடன் பகுதியளவில் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் அனைத்திலும் நேற்றைய தினம் முதல் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.