இராணுவ அட்டுழீயம் : கிருஷாந்தி படுகொலை நினைவு தினம் இன்று
யாழ்ப்பாணம் செம்மணியில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கிருஷாந்தி குமாரசுவாமியை நினைவுகூரும் நிகழ்வுகளும் செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவரகள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
சம்பவத்தின் பின்னணி
1996 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, வீடு திரும்பிய கிருஷாந்தி குமாரசுவாமி கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து ஒன்பது இராணுவத்தினரும் இரண்டு பொலிஸாரும் அடங்கலாக பதினொரு பேர் கிருஷாந்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருந்தனர்.
கிருஷாந்தி கைதுசெய்யப்பட்டமை குறித்து விசாரிப்பதற்காக சென்ற அவரது தாயார் இராசம்மா, சகோதரர் பிரணவன் மற்றும் அயல்வீட்டு காரரான சிதம்பரம் கிருபா மூர்த்தி ஆகியோரையும் இராணுத்தினர் கொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐந்து இராணுவத்தினருக்கும் பொலிஸார் ஒருவருக்கும் 1998 ஆம் ஆண்டு மரண தண்டணையும் மேலும் மூவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.