வட மாகாண தொழில்துறை திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக கண்காட்சிக்கு இரு மாகாணசபை உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளமைக்கு ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், மாகாண தொழில்துறை அமைச்சரின் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வட மாகாணசபையின் 105ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் தெரிவிக்கையில், வட மாகாண தொழில்துறை திணைக்களம் ஒழுங்கமைத்துள்ள கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அதில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வேறு உறுப்பினர்கள் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து மேற்படி நிகழ்வை ஒத்தி வைக்கவேண்டும் எனவும், இதனை ஒத்திவைக்காவிட்டால் மாகாண தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரனின் பட்ஜெட்டை தோற்கடிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.