பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் கால் பதிப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிவைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்து வருகின்றது.
இதன்படி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட வடக்கிலுள்ள சுமார் 30இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன் கொழும்பில் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது மஹிந்தவுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கும், வடக்கில் வாக்கு வங்கியொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே, வடக்கில் அரசியல் களநிலைவரம் குறித்து ஆராய்வதற்காகவும், தனிவழிப் பயணத்தை மேற்கொள்வதற்கான அடித்தளத்தை இடுவதற்காகவும் எதிர்வரும் 15ஆம் திகதி பஸில் ராஜபக்ச வடக்குக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தகவலை அவர்உறுதிப்படுத்தினார்.
வடக்கில் புதியதொரு அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதே மஹிந்த அணியின் நோக்கமாக இருக்கின்றது. இதற்காக புத்திஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்துறையினரும் உள்வாங்கப்படவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டு சின்னத்திலேயே மஹிந்த அணியின் அரசியல் பயணம் இனி ஆரம்பமாகும்.