தேசிய அரசின் ஆயுட்காலம் முடிவு!

தேசிய அரசு அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதால் அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆகக் குறைக்குமாறு ஜே.வி.பியின்தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் கோரிக்கை விடுத்தார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2இன் கீழான விசேட கூற்று ஆகியன முடிவடைந்த பின்னர் கேள்வியொன்றை எழுப்பி விளக்கமளிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் (46)ஆவது ஷரத்தின் பிரகாரம் தேசிய அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30இலிருந்து 48 ஆகவும், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 40இலிருந்து 45 ஆகவும் உயர்த்தமுடியும்.

இதற்கமைய தேசிய அரசை அமைப்பதற்குரிய யோசனை 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி பிரதமரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இது ஈராண்டுகளுக்கே செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் அரசியல் மேடைகளிலும் இரண்டு வருடங்களே அறிவிக்கப்பட்டது.

இம்மாதம் 3ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டன. எனவே, 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட அமைச்சுகள் மற்றும் பிரதி, இராஜாங்க அமைச்சுகளின் எண்ணிக்கையை அரசு குறைக்க வேண்டும்.

அதாவது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை 30ஆகவும், பிரதி, இராஜாங்க அமைச்சுகளின் எண்ணிக்கையை 40 ஆகவும் மட்டுப்படுத்த வேண்டும்” என்றார் அநுரகுமார திஸாநாயக்க.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இது பற்றி அரசு விரிவானதொரு விளக்கத்தை வழங்கும் என்றதுடன் தேவையேற்படின் ஆயுளை நீடிப்பதற்குரிய பிரேரணையை சமர்ப்பிக்க முடியும் எனவும் கூறினார்.

அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துகள் சரியானவை என்று சுட்டிக்காட்டி பேசிய மஹிந்த அணி எம்.பியான தினேஷ் குணவர்தன, அதிகரிக்கப்பட்ட அமைச்சுகள் தற்போது அமைச்சுகள் அல்ல என்று சுட்டிக்காட்டினார்.