ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலையை நிறுத்த இலங்கை அழுத்தம் கொடுக்குமா?

மியன்மாரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம் உலகையே உலுக்கி விட்டிருக்கும் நிகழ்வாகவே நோக்க முடிகிறது.

jhj

இதுவரையில் சிறுவர், பெண்கள் உள்ளிட்ட ஐயாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐ. நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் தலைமையிலான குழு அதன் அறிக்கையை கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று சமர்ப்பித்த ஒரு சில மணி நேரத்துக்குள் மியன்மார் ஆயுதப் படையினர் மீண்டும் அப்பாவி முஸ்லிம்கள் மீதான தமது வெறித்தனத்தைக் காண்பித்திருக்கின்றனர்.

ரோஹிங்கிய மாநிலத்தில் இன்று இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டுப்பாடடுக்குள் கொண்டுவர எவராலும் முடியாது என்ற அவலமே காணக்கூடியதாகவிருக்கின்றது.

உயிர்ப் பாதுகாப்புக்காக தப்பிச் செல்லும் ரோஹிங்கிய அப்பாவிகளை இந்த இரத்த வெறி பிடித்தவர்கள் துரத்தித் துரத்தி கொலை செய்து வருவதை உலகமே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றமை வேதனைதரக் கூடியதாகவே உள்ளது.

மியன்மாருக்கு அண்மித்த வறுமைக் கோட்டில் காணப்படும் பங்களாதேசம் நோக்கி இந்த மக்கள் அகதிகளாக அடைக்கலம் தேடிச் சென்று கொண்டிருப்பதால் அந்த நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

தம்மை நாடி வரும் அகதி மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குவது பங்களாதேசத்துக்கு மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது.

மியன்மாரின் இந்த அராஜகத்துக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஐ. நா. உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ரோஹிங்கிய மக்களைக் காப்பாற்ற முன்வர வேண்டியது மனிதாபிமானக் கடமையாகும்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்த இந்த விவகாரம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் அராஜகச் செயற்பாடாகும்.

அன்பு, கருணை, காருண்யம் போன்றவற்றை போதித்த போதி மாதவனின் வழியை பின்பற்றும் ஒரு பௌத்த நாட்டில் அநியாயமாக இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.

இது உலகளாவிய பௌத்தர்கள் தலைகுனிய வேண்டியதொன்றாகும். மதத்தின் பேரால் நடக்கும் இரத்த வெறியாட்டம் பௌத்த கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதே ஆகும்.

பௌத்த பீடங்கள் இந்த ஈனச் செயல் குறித்து வாய் மூடி மௌனம் காப்பது வெட்கப்பட வேண்டிய காரியமாகும்.

இந்த ரோஹிங்கிய மக்களுக்காக பாப்பரசர் குரல் கொடுத்திருக்கிறார். அந்த மக்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே துன்புறுத்தப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர் எனச் சுட்டிக் காட்டியிருக்கும் பாப்பரசர் சர்வதேச சமூகம். கண்களை மூடிக் கொண்டிராமல் உடன் தலையிட்டு இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாளின் போது மக்காவில் கூடியுள்ள உலக முஸ்லிம்கள் அனைவரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இலங்கை உட்பட முஸ்லிம்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ஹஜ் பெருநாள் தினத்தில் விசேட பிரார்த்தனைகளிலீடுபட்டனர்.

மியன்மார் ஒரு பௌத்த நாடு. முன்னர் இது பர்மா என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் மீது ஆரம்பம் முதலே அராஜகம் நிகழ்ந்து வந்துள்ளது.

இந்தியாவுடன் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்த நாடு. அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த இந்திய தமிழர்கள் மீதும் இதே அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து மிருகத்தனமாக நடந்து கொண்ட கறை படிந்த வரலாறு காணப்படுகின்றது. அதன் வடுக்கள் நிறையவே உண்டு.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தம் கைவரிசையை காட்டத் தொடங்கி

இன்று உலகில் வெறுக்கத் தக்கதொரு நாடாக மியன்மார் அடையாளப்படுத்தக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது.

மியன்மார் பௌத்த நாடாக இருந்த போதிலும் அந்த நாட்டு மக்கள் உண்மையான பௌத்த விழுமியங்களை பேணக் கூடியவர்களாகக் காணப்படவில்லை என்பதையே அதன் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன.

பௌத்த மதமோ, புத்தர் பிரானோ அநியாயமாக ஒரு உயிர் கொல்லப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

பௌத்த கோட்பாடுகள் மியன்மார் மக்களிடம் துளியளவும் காணப்படவில்லை என்பதையே அவர்கள் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன.

மியன்மாரிலுள்ள இன்றைய பிரச்சினை பௌத்தத்துக்கும் இஸ்லாத்துக்குமான நேரடிப் பிரச்சினையல்ல.

அங்குள்ள அரசும், பிக்குகளும் இந்த அராஜகத்தில் ஈடுபடுகின்ற போதும் இதுவொரு தேசியவாதத்துடன் தொடர்புபட்ட விவகாரமாகவே நோக்க வேண்டியுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் நேரடியாகத் தலையிட்டு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டிய கட்டாயக் கடப்பாட்டுக்குள் சர்வதேசம் உள்ளது. அதனை சர்வதேசம் தாமதமின்றிச் செய்ய முன்வர வேண்டும்.

அதுவரையில் அநியாயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.

மியன்மார் பௌத்த நாடு என்பது போன்று இலங்கையும் பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகவுள்ளது. மியன்மாருடன் எமது நாட்டுக்கு மிக நெருக்கமான தொடர்பு இருந்து வருகின்றது.

இந்த நல்லுறவைப் பயன்படுத்தி அங்கு இடம்பெற்று வரும் பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கை எடுக்க முடியும்.

இதனை நாம் ஒரு நாட்டின் விவகாரமாக நோக்காமல் மனிதாபிமான ரீதியில் கவனம் செலுத்தி தடுப்பதற்கான அரண்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் சார்பில் ஜனநாயக ரீதியில் அரசாங்கம் நல்லெண்ணத்துடன் இந்த விடயத்தை அணுக வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.