அமெரிக்காவின் கரீபியன் பகுதியில் வீசி வரும் கடும் காற்றுக் காரணமாக இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக உருவான சக்தி வாய்ந்த இர்மா புயல் கரீபியன் நாடுகளை தாக்கி வருகிறது.
கரீபியன் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள இர்மா புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுழற்றி அடித்த காற்றில் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இதேவேளை, பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இர்மா புயலினால் பிரான்ஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவுகளில் சுமார் 95 சதவிதம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், இப்பகுதியில் 6 பேர் பலியானதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேலும் மூன்று பேர் இந்த புயலுக்கு உயிரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘இர்மா’ புயல் எச்சரிக்கையால் புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலின் வேகம் மணிக்கு சுமார் 295 கீ.மி. வரை அதிகரிக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.