காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று கிளிநொச்சியில் 200 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்கா பணியகத்தின் கீச்சகத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.
அதில்,“ தமது அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்று, உறவினர்களுக்கு அரசாங்கம் அவசரமாக கூற வேண்டிய தேவை உள்ளது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 5 தாய்மார் இறந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சிலரை நேற்று முன்தினம் சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனவர்களில் எவரும், இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று முப்படையினரும் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.