போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உரிய விசாரணை உடன் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்திருந்தது.
ஐ.நா. உடன்படிக்கையின் 30ஆவது சரத்தின் பிரகாரம் சர்வதேச இராஜதந்திரிகளும், விசாரணையாளர்களும், சட்டவறிஞர்களும் விசாரணைப் பொறிமுறையில் பங்கேற்க முடியும் என்று இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனந்தபுரம், முல்லைத்தீவு, மருதங்கேணி போன்ற இடங்களில் இறுதிப் போரின் போது நான்கு இலட்சம் மக்கள் இருந்தனர். ஆனால், 20 ஆயிரம் மக்களுக்கு மாத்திரமே உணவுகள் அனுப்பப்பட்டிருந்தன.
இதன்போது வன்னி கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றியது ஜகத் ஜயசூரியவே. இவரின் அநீதிகள் மற்றும் குற்றமிழைப்புகள் தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டிருந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும், சர்வதேச இராஜதந்திரிகளையும் அவர் அடித்து விரட்டியிருந்தார்.
அதேபோல் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் பல அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களும் இவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளனர்.
இவர் போர்க்குற்றம் இழைத்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக சரத் பொன்சேகா கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதி சு.கவின் 66ஆவது மாநாட்டில் ஜகத் ஜயசூரியவை காப்பாற்றும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த நாட்டில் இன்னமும் இனவாதம் ஒழியவில்லை. இனவாதத்தின் அடிவேர் அறுக்கப்படவில்லை.
குற்றமிழைக்காவிடின் ஜகத் ஜயசூரிய எதற்கு பிரேஸிலிலிருந்து இங்கு தப்பியோடி வந்தார்.
ஜகத் ஜயசூரிய தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு சாட்சியமளிக்க சரத் பொன்சேகா தயாராக இருக்கின்றார். எனவே, ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.